பள்ளிக்கூட பொன்விழா ஆண்டு புதிய நுழைவுவாயில்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்

சிவகிரி சேனைத்தலைவர் பள்ளிக்கூட பொன்விழா நுழைவுவாயிலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

Update: 2022-07-12 16:28 GMT

சிவகிரி:

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் பொன்விழா ஆண்டு புதிய நுழைவுவாயிலை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

பொன்விழா நுழைவுவாயில்

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியின் 50-வது பொன்விழா ஆண்டு புதிய நுழைவுவாயில் திறப்பு விழா நேற்று நடந்தது. தனுஷ்குமார் எம்.பி., டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்க தலைவர் மாரியப்பன், துணைத் தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய பொன்விழா நுழைவு வாயிலை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொன்விழா மலரை வெளியிட்டார்.

தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தும், பொன்விழா மலர் முதல் பிரதியையும் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பள்ளியின் வளாகத்தில் முத்தையா மூப்பனார் நினைவு அரங்கத்தில் 50-வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன் வரவேற்றார்.

கல்லூரியாக மாறுவதற்கு...

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

இந்தப்பள்ளி 1971-ம் ஆண்டு சிவகிரி சேனைத்தலைவர் உயர்நிலைப்பள்ளியாக முதன்முதலில் தொடங்கப்பட்டது கலைஞரின் தி.மு.க. ஆட்சியில் தான். பின்னர் 1979-ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதும் கலைஞர் ஆட்சியில் தான். 1996-ல் பள்ளியின் வெள்ளி விழா நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டபோதும் கலைஞர் ஆட்சியில் தான். 2002-ம் ஆண்டு பள்ளியின் நிரந்தர அங்கீகார ஆணை பெறப்பட்டதும் கலைஞர் ஆட்சியில் தான். 2007-ம் ஆண்டில் ஆங்கில வழக்கல்வி தொடங்கப்பட்டதும் கலைஞர் ஆட்சியில் தான். தற்போது 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்படுவதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் என்பதனை நான் கேள்விப்பட்டு உள்ளம் பூரிப்பு அடைகிறேன்.

சிவகிரி வட்டாரத்தில் இப்பள்ளியை போல ஏனைய பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் முன்னேற்றம் காண வழி வகுக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் இப்பள்ளியின் தரம் உயர, கல்லூரியாக மாறுவதற்கு ஏனைய உதவிகளை செய்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை, செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், தென்காசி முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ் ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்