பொன்விழா ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பொன்விழா நிறைவு கொண்டாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பொன்விழா நிறைவு கொண்டாட்டம் நடைபெற்றது.
பொன் விழா கொண்டாட்டம்
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் கத்தோலிக்க மறைமாவட்ட பேராலயமான சவேரியார் பேராலயம் ரூ.16 கோடியில் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை நன்றி திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பொன் விழா நிறைவு கொண்டாட்டம் சேவியர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. போப் ஆண்டவரின் இந்திய -நேபாள தூதுவர் பிஷப் லெயோபோல்தோ ஜிரெல்லி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் தென்கோடியில் உள்ள பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் பொன்விழா நிகழ்வுகளில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பாளையங்கோட்டை நகரம் கல்வி, தொழில், மருத்துவம் என பல்வேறு துறைகளில் வளர்ந்த நகரமாக திகழ்கிறது. மக்களுக்கு சேவையுடன் கூடிய கல்வியை கொடுத்து ஞானத்தை வளர்த்ததிலும், குறிப்பாக பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நல்வழிபடுத்துவதிலும் கிறிஸ்தவ தொண்டர்கள் பலர் முனைப்புடன் செயல்பட்டிருப்பதை கேள்விப்படும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.
மதநல்லிணக்கம்
சமூக சிந்தனையுடன் கூடிய சேவையை வழிநடத்தும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்ட பிஷப்களை பாராட்டுகிறேன். தென் இந்தியாவில் இறைவனின் நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபட்ட தூய சவேரியார் பல்வேறு திருச்சபைகள் உருவாக காரணமாக திகழ்ந்தார். அவரது வழியில் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். மதநல்லிணக்கம், தொண்டு உள்ளம், நம்பிக்கை விதைக்கும் நல்ல சிந்தைகளை சமூகத்தில் விதைக்கும் பணியினை தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவரது தலைமையில் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.
பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி, முன்னாள் பிஷப் ஜூடுபால்ராஜ், ஐதராபாத் உயர் மறைமாவட்ட கர்தினால் அந்தோணி பூலா, புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பிஷப் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை உயர் மறைமாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி திருப்பலி நிகழ்த்தினார். சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் பிஷப் சூசை மாணிக்கம் மறையுரை வழங்கினார். இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், அய்யாவழி மக்கள் இயக்கம் பாலபிரஜாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.