நெல்லிக்குப்பம்சுப்பிரமணியசாமி கோவிலில் தங்க தாலி திருட்டு
நெல்லிக்குப்பம் சுப்பிரமணியசாமி கோவிலில் தங்க தாலியை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகர் பகுதியில் வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சரவணன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை கோவிலின் பின்பக்க சிமெண்ட் ஷீட் உடைக்கப்பட்டும், முன்பக்க இரும்பு கிரில் கேட்டில் போடப்பட்டிருந்த 3 பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுபற்றி கோவில் நிர்வாகத்துக்கும் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, வள்ளி தெய்வானை சாமி கழுத்தில் இருந்த ¾ பவுன் தாலியை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் கோவில் கதவு பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து தங்க தாலியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க தாலியை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.