100 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி

தூத்துக்குடியில் 100 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி மற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

Update: 2023-03-11 18:45 GMT

தூத்துக்குடியில் 100 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி மற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தாலிக்கு தங்கம்

தூத்துக்குடியில் நேற்று சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்காக தேவைப்படும் அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியினை நடத்தி வருகிறார்.

100 பெண்கள்

இந்த விழாவில் ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 86 பேர், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 பேர், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 12 பேர் என மொத்தம் 100 பெண்களுக்கு ரூ.43.75 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்க நாணயம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல் அன்னை சத்திவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 77 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான உத்தரவு 21 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 12 பயனாளிகளுக்கு ரூ.3.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் 30 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டு" என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தி.மு.க. பொதுக்கூட்டம்

கோவில்பட்டியில் நகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமர் தலைமை தாங்கினார். அவை தலைவர் முனியசாமி, துணை செயலாளர்கள் காளியப்பன், அன்பழகன், உலக ராணி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பராஜ், ரவீந்திரன், மாரிச்சாமி, நகர பொருளாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், நகரச் செயலாளரும், நகரசபை தலைவருமான கருணாநிதி ஆகியோர் பேசினார்கள்.

இதில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். முடிவில், இளைஞர் அணி அமைப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

புகைப்பட கண்காட்சி

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 'ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி' என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த கண்காட்சி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்