பனியன் பஜார் தீ விபத்தில் ஒரு கடையில் இருந்த 7 பவுன் நகை உருகி சேதம்

திருப்பூர் பனியன் பஜாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு கடையில் வைத்திருந்த 7 பவுன் நகை உருகி சேதம் ஆனது. இதனால் தனது மகனின் படிப்புக்கு என்ன செய்வேன் என பெண் கண்ணீருடன் கூறினார்.

Update: 2023-06-24 18:46 GMT

திருப்பூர் பனியன் பஜாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு கடையில் வைத்திருந்த 7 பவுன் நகை உருகி சேதம் ஆனது. இதனால் தனது மகனின் படிப்புக்கு என்ன செய்வேன் என பெண் கண்ணீருடன் கூறினார்.

48 கடைகள் எரிந்து நாசம்

திருப்பூர் காதர்பேட்டை நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பனியன் பஜாரில் 48 கடைகள் செயல்பட்டு வந்தன. சில்லறை விற்பனை கடைகள் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பனியன் ஆடைகள் வாங்க வருவதால் எப்போதுமே இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரே வளாகத்தில் 48 கடைகள் அருகருகே அமைந்திருந்ததால் விரும்பிய ஆடைகளை வாங்குவதற்காகவே இங்கு மக்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9½ மணி அளவில் இந்த பனியன் பஜாரில் உள்ள பனியன் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து தீப்பொறி விழுந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். தீ மளமளவென பரவியதில் 48 கடைகளும் தீக்கிரையானது. கடையில் இருந்த ஆடைகள், 4 இருசக்கர வாகனங்கள், ஜெனரேட்டர் ஆகியவை முற்றிலும் சேதமடைந்தது. அருகில் இருந்த வீடு பாதியளவு சேதமானது. கடைகளை பூட்டிவிட்டு வியாபாரிகள் வெளியே சென்ற நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. 6 தீயணைப்பு வாகனங்கள், 10 தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மலை போல் குவிந்த குப்பை

இந்த தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஆடைகள், பொருட்கள் சேதமானதாக தெரிவித்தனர். திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக சம்பந்தப்பட்ட இடத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று காலை முதல் தொடங்கியது. இரும்பு கம்பிகள், எரிந்து போன ஆடைகள் என மலைபோல் குப்பை குவிந்தது. அவற்றை லாரிகளில் ஏற்றி அப்புறப்படுத்தினார்கள்.

தீ விபத்து தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வருவாய்த்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்தில் 48 கடைகள் இருந்த இடம் தெரியாமல் காலியிடமாக நேற்று காட்சியளித்தது. கடை வியாபாரிகள் சோகமாக அந்த இடத்தை பார்த்தபடி இருந்தது கண்கலங்க வைத்தது. தீ விபத்தால் அருகே உள்ள கடைகளின் பக்கவாட்டு ஜன்னல்கள், எதிரே உள்ள கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. அதுபோல் மின்கம்பங்களில் இருந்த மின்கம்பிகள் உருகி சேதமாகியிருந்தது.

7 பவுன் நகை சேதம்

பனியன் பஜாரில் கடை வைத்திருந்த வியாபாரிகள், பணம் மற்றும் தங்களின் வீட்டு பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வங்கியில் கடன் பெறுவதற்காக கடைக்குள் வைத்திருந்தனர். தீ விபத்தில் அவை சேதமானதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டனர். பனியன் பஜாரில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண் கடை வைத்திருந்தார். இவர் தனது மகனின் 2-ம் ஆண்டு கல்லூரி படிப்பு செலவுக்காக தனது 7 பவுன் நகையை வங்கியில் அடகு வைக்க நேற்றுமுன்தினம் கொண்டு வந்து கடைக்குள் வைத்துள்ளார். நேற்று வங்கியில் அடகு வைக்கலாம் என்று நினைத்திருந்த நிலையில் தீ விபத்தில் அந்த 7 பவுன் நகையும் உருகி நாசமானது.

நேற்று காலை புவனேஸ்வரி கண்ணீர் சிந்தியபடி தனது கடை அமைந்திருந்த இடத்தில் கருகிய ஆடைகளுக்கு நடுவே நகை ஏதாவது கிடைக்குமா என்று கிளறியபடி தேடினார். சிறு, சிறு துண்டுகளாக தங்க நகை உருகி காணப்பட்டது. அதை ஒரு காகிதத்தில் மடித்து வைத்து கண்ணீர்விட்டு கதறினார்.

மகனின் படிப்பு

இதுகுறித்து புவனேஸ்வரி கூறும்போது, 'தீ விபத்தில் நகைகள் அனைத்தும் நாசமாக போய்விட்டது. எனது மகனின் படிப்பு செலவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய கடையை இழந்தது ஒருபுறம், கையில் இருந்த நகையும் பறிபோனது மறுபுறம் என அடுத் து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்