பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் தங்க சங்கிலி மோசடி
கும்பகோணம் அருகே குடும்ப பிரச்சினைகள் தீர பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் தங்க சங்கிலி மோசடி செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம்;
கும்பகோணம் அருகே குடும்ப பிரச்சினைகள் தீர பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் தங்க சங்கிலி மோசடி செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரிகார பூஜை
கும்பகோணம் எழில் நகரை சேர்ந்தவர் மும்தாஜ்பேகம். இவர் கடந்த 1-ந் தேதி தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு காணிக்கை கேட்டு ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் வந்தனர். அவர்களிடம் மும்தாஜ்பேகம் தனது குடும்பத்தில் அதிக பிரச்சினைகள் உள்ளதாக கூறினாா்.அப்போது மும்தாஜ்பேகத்திடம் நைசாக பேசிய காணிக்கை ேகட்டு வந்த 3 பேரும் தங்களுக்கு மாந்தரீகம் தெரியும் என்றும் பரிகார பூஜை செய்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீரும் என்று கூறினர். இதை நம்பிய மும்தாஜ்பேகம் பூஜையில் வைக்க தனது 1 பவுன் சங்கிலியை அவர்களிடம் கொடுத்தார்.
விசாரணை
சங்கிலியை பெற்றுக்கொண்ட 3 பேரும் சிறிது நேரத்துக்கு பின் பூஜை முடிந்து விட்டதாக கூறி மும்தாஜ் பேகத்திடம் ஒரு பொட்டலத்தையும் எலுமிச்சம்பழத்தையும் கொடுத்தனா். பின்னர் அவர்கள் இந்த பொட்டலத்தில் தங்க சங்கிலி உள்ளதாகவும் ஒரு நாள் கழித்து பொட்டலத்தை பிரித்து பார்க்க வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று வி்ட்டனர்.மறுநாள் மும்தாஜ்பேகம் அவர்கள் கொடுத்த பொட்டலத்தை பிரித்து பாா்த்தாா். அப்போது அந்த பொட்டலத்தில் தங்க சங்கிலிக்கு பதிலாக கல் உப்பை வைத்து மடித்து கொடுத்து சென்றது ெதரியவந்தது. இது குறித்து மும்தாஜ் பேகம் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் தீவிர ேதடுதல் வேட்டை நடத்தி சங்கிலியுடன் மாயமான பெண் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மாதேஸ்வரன் (வயது26) இவருடைய மனைவி ரேணுகா தேவி (28,) இதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் விஜய் (21) என தெரியவந்தது. கணவன்- மனைவி உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.