உண்டியலில் தவறுதலாக நகையை போட்ட கேரள பெண்ணுக்கு தங்க சங்கிலி

பழனி முருகன் கோவில் உண்டியலில், தவறுதலாக நகையை போட்ட கேரள பெண்ணுக்கு தங்க சங்கிலி வழங்கப்பட்டது.

Update: 2023-05-25 16:54 GMT

பழனிக்கு வந்த கேரள பெண்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி, கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் பத்தியூர் கிழக்கு பகவதிபடி பகுதியை சேர்ந்த சசிதரன்பிள்ளை மகள் சங்கீதா என்பவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

உண்டியலில் போட்ட நகை

சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே செல்லும் வழியில், தெற்கு மயில் வாகனம் அருகே உள்ள உண்டியலில் துளசி மாலையை சங்கீதா காணிக்கையாக செலுத்த முயன்றார்.

அப்போது பக்தி பரவசத்தில் இருந்த அவர், தான் அணிந்திருந்த சுமார் 1¾ பவுன் தங்க சங்கிலியையும் தவறுதலாக உண்டியலில் போட்டு விட்டார். இதனால் சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில் நிர்வாகத்துக்கு கடிதம்

இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு சங்கீதா தகவல் தெரிவித்தார். மேலும் உண்டியலில் நகை தவறுதலாக நகை விழுந்து விட்டது என்றும், குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு உண்டியலில் விழுந்த சங்கிலியை திரும்ப வழங்க வேண்டும் என்றும் கோவில் அலுவலகத்தில் சங்கீதா கடிதம் கொடுத்தார்.

இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சங்கீதா தங்க சங்கிலியை உண்டியலில் போட்டது உறுதி செய்யப்பட்டது.

ஆனால் சட்டப்படி உண்டியலில் விழுந்த பொருட்கள் திரும்ப வழங்குவதற்கான வழிவகை எதுவும் இல்லை. இருப்பினும் நகையை திரும்ப பெறும் முயற்சியில் சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டனர்.

தங்கசங்கிலி

இந்தநிலையில் சங்கீதாவின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், தனது சொந்த செலவில் சங்கீதாவுக்கு தங்க சங்கிலியை வழங்க முடிவு செய்தார்.

அதன்படி ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் சந்திரமோகன் சார்பில் வாங்கப்பட்ட 17.460 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலியை, அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன் சங்கீதாவிடம் வழங்கினார். தங்க சங்கிலியை பெற்றுக்கொண்ட சங்கீதா குடும்பத்தினர், மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்