'கோல்டு பிசினஸ்' மோசடி: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்

‘கோல்டு பிசினஸ்’ மோசடி தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

Update: 2023-04-04 19:44 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்த மாரி மற்றும் 20 பேர் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.

அந்த மனுக்களில் கூறிஇருப்பதாவது:-

நெல்லையை சேர்ந்த சக்சஸ் சுந்தர் என்பவர் சமூக வலைத்தளத்தில் இந்தி கற்றுக்கொடுத்தார். அப்போது அவருடன் பலருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் சேரன்மாதேவி அருகே மணிமுத்தார்குளம் பகுதியில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் புதிய கோல்டு பிசினஸ் என்ற பெயரில் தங்க நகை வணிக திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இதில் சேருவோர் ரூ.24 லட்சம் சம்பாதிக்க முடியும் என்று கூறினார். அதாவது 10 கிராம் தங்கம் வாங்கினால் ரூ.24 லட்சம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட 100-க்கும் மேற்பட்டோர் கடந்த 2020-ம் ஆண்டு அவரது திட்டத்தில் இணைந்தோம்.

அதன் பிறகு அவரது திட்டத்தில் இருந்து வெளியேற கேட்ட போது, எங்களது பணத்தை திரும்ப தரமுடியாது என்று கூறிவிட்டார். பலமுறை கேட்ட போதிலும் அலைக்கழித்து வருகிறார். எனவே மோசடி செயல்களை தடுத்து நிறுத்தி, எங்களது பணத்தை மீட்டு தரவேண்டும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறிஇருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்