உடுமலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தி
முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாதத்தின் 5-வது மாதமான ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று இந்த விழா விமரிசையாக எடுக்கப்படுகிறது. அன்றைய நாளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்து கொழுக்கட்டை, பொரி, சுண்டல், தேங்காய், பழம், கரும்பு வைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள்.
பின்னர் 3 அல்லது 5 நாட்கள் கழித்து வாணவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமான ஒன்றாகும். இந்த நிகழ்வானது ஆண்டு தோறும் இந்துக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிலைகள் தயாரிப்பு
அந்த வகையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உடுமலை சிவசக்தி காலனி பகுதியில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாக்பவுடர், தேங்காய் மஞ்சி கொண்டு அச்சில் வார்த்து சிலைகளை வடிவமைத்து வர்ணம் பூசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர். வடிவமைக்கப்பட்டு உள்ள சிலைகள் கண்களை கொள்ளை கொள்ளும் அழகில் மனதை கவர்ந்து வருகிறது.