கோபி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை

கோபி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-08-18 22:00 GMT

கடத்தூர்

கோபி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரி

கோபியில் 200 படுக்கை வசதிகளுடன் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அடுத்த பெரிய ஆஸ்பத்திரியாக கோபி ஆஸ்பத்திரி உள்ளது. மேலும் இந்த ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் வசதி, மகப்பேறு சிகிச்சைக்காக சிறப்பு ஸ்கேன் வசதி, டயாலிசிஸ் சிகிச்சை வசதி, இதய சிகிச்சைக்கு என தனிப்பிரிவு போன்றவை உள்ளன.

இதன் காரணமாக இந்த ஆஸ்பத்திரியை கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். மேலும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 800-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், உள்நோயாளிகளாக 200 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாற்று பணிக்கு...

தமிழக அரசு சுகாதாரத்துறையின், வெளிப்படையான கலந்தாய்வு முறையில் போதுமான அளவு டாக்டர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக சிகிச்சை பெறும் நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து கோபியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் 3 டாக்டர்கள் அந்தியூர் மற்றும் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்று பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். புதன்கிழமைதோறும் ஒரு டாக்டர் 24 மணி நேரம் பணி செய்ய கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்று பணிக்கு அனுப்பப்படுகிறார்.

நடவடிக்கை

மேலும் 2 டாக்டர்கள் காலவரையின்றி தினமும் பவானி மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்று பணிக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் மீதம் உள்ள டாக்டர்களே கோபி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றுகின்றனர். இதிலும் கோர்ட்டு பணி, மாற்றுத்திறனாளிகள் முகாம் மற்றும் வார இறுதி நாட்களில் நடைபெறும் மருத்துவ முகாமுக்கும் டாக்டர்கள் செல்வதால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கோபி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களை முறையாக பணியமர்த்தி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்