ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
ஆட்டுச்சந்தை
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடை பகுதியில் ஆட்டுச்சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொருவாரம் சனிக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெறும்.
இங்கு சராசரியாக குறைந்த பட்சம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆகும்.
ரம்ஜான் பண்டிகை
இந்த ஆட்டுச்சந்தைக்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், கெங்கவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதேபோல ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் இந்த சந்தைக்கு வருவார்கள்.
இந்நிலையில், வருகிற 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஆடுகளை விற்பனை செய்வதற்காக நூற்றுக்கணக்கான ஆட்டு வியாபாரிகள் காலையிலிருந்தே பல்வேறு வாகனங்களில் ஆடுகளை கொண்டு வந்து இறக்கினார்கள். ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை அதன் எடைக்கு ஏற்ப பேரம் பேசி வாங்கி சென்றனர்.
ரூ.1 கோடிக்கு...
ஒரு ஆடு சுமார் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை விலை போனது. ஆடுகளை போட்டிப்போட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோர் வாங்கிச் சென்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரத்தைவிட இந்த வாரம் ஆடுகளின் விலை அதிகமாக இருந்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், பொதுமக்களும் ஆடுகளை வாங்கி சென்றனர்.
நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை ஆனது. சுமார் ரூ.1 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர்.
-------