சமயபுரம், தாயனூர் சந்தைகளில் விற்பனைக்காக குவிந்த ஆடுகள்

தீபாவளி பண்டிகையையொட்டி சமயபுரம், தாயனூர் சந்தைகளில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

Update: 2022-10-22 19:30 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி சமயபுரம், தாயனூர் சந்தைகளில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

ஆட்டுச்சந்தை

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச. கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமயபுரம் ஒத்தக்கடை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஆட்டுச் சந்தை கூடுவது வழக்கம். இந்த ஆட்டுச்சந்தை மிகவும் பிரபலமானதாகும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று சராசரியாக குறைந்த பட்சம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள், அதன் எடை, தரத்திற்கேற்ப விற்பனையாகும்.

இந்த ஆட்டுச்சந்தைக்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், கெங்கவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதேபோல ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் இந்த சந்தைக்கு வருவார்கள்.

வியாபாரிகள்

இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை நடைபெற உள்ளது. இதையொட்டி ஆடுகளை விற்பனை செய்வதற்காக நூற்றுக்கணக்கான ஆட்டு வியாபாரிகள் காலையிலிருந்தே பல்வேறு வாகனங்களில் ஆடுகளை கொண்டு வந்து இறக்கினார்கள். ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை அதன் எடைக்கு ஏற்ப பேரம் பேசி வாங்கி சென்றனர்.ஒரு ஆடு சுமார் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை விலை போனது. ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

ஏமாற்றம்

இருப்பினும் வியாபாரிகள் எதிர்பார்த்த அளவிற்கு ஆடுகள் விற்பனை ஆகவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்ததாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வந்ததாகவும், சுமார் ரூ.70 லட்சம் வரை ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

தாயனூர் சந்தை

சோமரசம்பேட்டை அடுத்துள்ள தாயனூரில் சனிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடும். தீபாவளி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று கூடிய சந்தையில் வழக்கத்தை விட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டன.

நேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளியூர் வியாபாரிகளும் ஆர்வமாக போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்