காயங்களுடன் இறந்து கிடந்த 10 ஆடுகள்
கும்பகோணம் அருகே கொட்டகைக்குள் காயங்களுடன் 10 ஆடுகள் இறந்து கிடந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே கொட்டகைக்குள் காயங்களுடன் 10 ஆடுகள் இறந்து கிடந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 ஆடுகள் சாவு
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அமுதா (வயது70). வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார்.இவரிடம் சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான 10 ஆடுகள் இருந்தன. பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் அமுதா மாலை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்குள் ஆடுகளை கட்டி வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அமுதா ஆடுகளை கொட்டகைக்குள் கட்டி வைத்தார்.நேற்று காலை வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகைக்கு சென்ற போது அங்கு கழுத்து முறிந்து ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் 10 ஆடுகளும் இறந்து கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அமுதா கதறி அழுதார்.
போலீசார் விசாரணை
உடனே அக்கம் பக்கத்தினர் சம்பவ இ்டத்துக்கு வந்து இறந்து கிடந்த ஆடுகளை பாா்த்து திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இ்டத்துக்கு சென்று ஆடுகள் எப்படி இறந்தது? ஆடுகள் அனைத்தும் கட்டப்பட்ட நிலையிலும் இறந்து கிடப்பதால் இது எப்படி நடந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தார்.மேலும் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 10 ஆடுகளையும் மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது ஆடுகள் சாவுக்கு காரணம் என்ன? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.