குந்தாரப்பள்ளி சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. ரூ.6 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-10-21 18:45 GMT

குருபரப்பள்ளி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. ரூ.6 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாரச்சந்தை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தினத்தில், கிராமப்புறங்களில் சாமிக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு வணங்குவது வழக்கம். இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்படும்.

அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று குந்தாரப்பள்ளி வாரச்சந்தைக்கு அதிகாலை முதலே ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கொண்டு வந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஆடுகளை விற்கவும், வாங்கி செல்லவும் விவசாயிகள், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில்குவிந்தனர்.

விற்பனை படுஜோர்

குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் சந்தைக்கு ஆடுகள், கோழிகள் வாங்குவதற்காக வந்திருந்தனர். அவர்கள் போட்டி போட்டு விலை கேட்டனர். இதனால் ஆடுகள், கோழிகள் விற்பனை படுஜோராக நடந்தது.

இதுதொடர்பாக விவசாயிகள், வியாபாரிகள் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்காக ஆடுகள் வளர்த்து வந்த விவசாயிகள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். காலை 5 மணி முதலே ஆடு விற்பனை தொடங்கியது. எடையை பொறுத்து ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ஒரு நாளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை படுஜோராக நடந்தது. இதனால் ரூ.6 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. வழக்கத்தை விட நேற்று கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்