நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Update: 2023-01-10 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆடுகள் ரூ.1 கோடிக்கு விற்பனையாகின.

நல்லம்பள்ளி சந்தை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த வாரச்சந்தைக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கவும், விற்கவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் நடக்கும் சந்தையில் அதிகாலை நேரத்தில் ஆடுகள் விற்பனை தொடங்கி காலை நேரத்திலேயே அனைத்து ஆடுகளும் விற்பனை ஆகிவிடும். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

ஆடுகள் விற்பனை விறுவிறுப்பு

நேற்று அதிகாலை நல்லம்பள்ளியில் ஆட்டு சந்தை தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் இந்த சந்தையில் குவிந்தனர். இதேபோல் ஆடுகளை வாங்கவும் ஏராளமான வியாபாரிகள் சந்தையில் திரண்டனர். வியாபாரிகள் மற்றும் வீடுகளில் ஆடுகளை வளர்த்தவர்கள் என அனைவரும் விற்பனைக்காக ஆடுகளை அதிக அளவில் கொண்டு வந்திருந்தனர்.

ஆடுகள் எடைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு நேற்று ஆடுகள் விற்பனை சந்தையில் களை கட்டியது. அதிகாலையில் கடும் பனிப்பொழிவிலும் விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்