திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளு, குளு சீசன் நிலவி வருகிறது.

Update: 2023-05-03 20:13 GMT

திருவட்டார், 

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளு, குளு சீசன் நிலவி வருகிறது.

தொடர் மழை

குமரி மாவட்டத்தில் கடுமையான கோடை வெயிலுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.

நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. சில இடங்களில் இடி- மின்னலுடன் மழை கொட்டியது.

குளு குளு சீசன்

மலையோரப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன் நிலவி வருகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவியின் அருகிலுள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று, பச்சைபசேல் புல்வெளி தோட்டம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அருவியில் குளித்தும், நீச்சல் குளத்தில் நீந்தியும் ஆனந்தமாக பொழுதை போக்கினர். மேலும் சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்தனர். படகில் அமர்ந்து பயணம் செய்ததோடு சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

குழித்துறை பகுதியில் 68 மி.மீ. மழை பதிவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குழித்துறை பகுதியில் 68 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 44.8, சிற்றார்-1 அணை- 9.4, சிற்றார்-2 அணை- 7.2, மாம்பழத்துறையாறு அணை- 16, முக்கடல் அணை- 4, பூதப்பாண்டி- 10.2, களியல்- 23, கன்னிமார்- 2.4, கொட்டாரம்- 18.6, மயிலாடி- 23.4, நாகர்கோவில்- 41.2, சுருளக்கோடு- 1.2, தக்கலை- 35.2, இரணியல்- 6.4, பாலமோர்- 2.4, ஆரல்வாய்மொழி- 2.2, கோழிப்போர்விளை- 4.8, அடையாமடை- 17, குருந்தன்கோடு- 9.8, முள்ளங்கினாவிளை- 32.2, ஆனைக்கிடங்கு- 13.2 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

இந்த மழையின் காரணமாக நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 736 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 71 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 26 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 41 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 8.8 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. இதில் குடிநீருக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 51 கன அடி தண்ணீரும், முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதிலும் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்