உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி
நெல்லையில் உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
உலக கண்நீர் அழுத்த நோய் தினம் மார்ச் 2-வது வாரம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி வரை ஒரு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது. இதனை மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்திய மருத்துவ சங்க நெல்லை கிளை நிர்வாகிகள் டாக்டர்கள் சுப்பிரமணியன், முகமது இப்ராஹிம், பிரபுராஜ், அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் லயனல்ராஜ் கண்நீர் அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பேசினார். மனித சங்கிலியில் கல்லூரி மாணவ-மாணவிகள், செவிலியர்கள், டாக்டர்கள் உள்பட பலர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு வாசகங்களை கூறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. நிகழ்ச்சியை மேலாளர் கோமதிநாயகம் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கண்நீர் அழுத்த பிரிவு டாக்டர் பெட்ஸி கிளமென்ட், உதவி பொது மேலாளர் பிரபு, கண் வங்கி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ், பேச்சிமுத்து, அப்துல் ஹமீது ஆகியோர் செய்திருந்தனர்.