சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு: கைதானவர்களிடம் மருத்துவ குழுவினர் இன்று விசாரணை

சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் கைதானவர்களிடம் மருத்துவ குழுவினர் இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்த உள்ளனர்.

Update: 2022-07-03 20:51 GMT

சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் கைதானவர்களிடம் மருத்துவ குழுவினர் இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்த உள்ளனர்.

கருமுட்டை விற்பனை

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட மாலதி, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததாக ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் கருமுட்டை எடுக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளின் உரிமையாளர்கள், டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசாரும், சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு அருகே ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அங்கு ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அவர் திடீரென தற்கொலைக்கு முயன்றார். அவர் உடனடியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து மீண்டும் அதே காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவ குழுவினர் விசாரணை

இந்தநிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி ஆகியோரிடமும், கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தை, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஜான் ஆகியோரிடமும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகளிர் கோர்ட்டில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி மாலதி வருகிற 4-ந் தேதி 4 பேரிடமும் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதன்பேரில் டாக்டர் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று (திங்கட்கிழமை) கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளனர். இதேபோல் சிறுமியின் வளர்ப்பு தந்தை மற்றும் ஜான் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்