கடகத்தூர் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் ரூ.3¼ கோடியில் மாணவிகள் விடுதி-கலெக்டர் சாந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
தர்மபுரி:
கடகத்தூர் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் ரூ.3¼ கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவிகள் விடுதியை கலெக்டர் சாந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மாணவிகள் விடுதி
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மாணவிகள் விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 25 அறைகள், உணவருந்தும் கூடம் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் 100 மாணவிகள் தங்கும் வகையில், நவீன வசதியுடன் இந்த விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தமிழகம் முழுவதும் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மாணவிகள் விடுதி கட்டிடம் உட்பட பல்வேறு கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கலெக்டர் அறிவுறுத்தல்
இதைத்தொடர்ந்து புதிதாக திறந்து வைக்கப்பட்ட மாணவிகள் விடுதியில் மாவட்ட கலெக்டர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள இந்த விடுதி கட்டிடத்தை மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, சிறந்த முறையில் தொழிற் பயிற்சியுடன் கூடிய கல்வி பயில வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, அரசு ஐ.டி.ஐ. முதல்வர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் சேட்டு, பா.ம.க. நிர்வாகி பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.