பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் பெண்கள் வாக்குவாதம்

பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-27 19:50 GMT

குன்னம்:

ஆசிரியர் கைது

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவர் செல்வகுமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஆசிரியர் செல்வகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள், ஆசிரியர் செல்வகுமார் கைது செய்யப்பட்டது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தலைமை ஆசிரியரிடம், சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் ஆசிரியர் செல்வகுமார் மீது நாங்கள் புகார் கொடுக்கவில்லை. அவர் நல்ல ஆசிரியர்.

முற்றுகை

அவர் கைது செய்யப்பட்டதால் எங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்று கூறி, அவரை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்