தந்தை இறந்த துக்கத்திலும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
நீடாமங்கலத்தில், தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருவாரூர்;
நீடாமங்கலத்தில், தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
10-ம் வகுப்பு மாணவி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் பண்டார ஓடை பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 50). இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகள் சந்தியா(15), பூவனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.தற்போது சந்தியா 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை நீடாமங்கலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் எழுதி வருகிறார்.
தந்தை சாவு
சந்தியாவின் தந்தை சங்கர் நேற்று முன்தினம் பூவனூர் கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
கண்ணீருடன் தேர்வெழுதினார்
இதைத்தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. நேற்று முன்தினம் தந்தை இறந்த துக்கத்திலும் சங்கரின் 3-வது மகள் சந்தியா நேற்று தேர்வு எழுதுவதற்காக கண்களில் நீர் ததும்ப பள்ளிக்கு வந்தார்.தேர்வு மையத்தில் அமர்ந்து துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீருடன் தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டுக்கு சென்றாா்.
தந்தையின் ஆசையை நிறைவேற்ற...
முன்னதாக தேர்வு மையத்தில் கண்களில் நீர்ததும்ப நின்ற சந்தியா கூறியதாவது:-எனது தந்தை சங்கர் விவசாய கூலித்தொழிலாளி. எனது மூத்த சகோதரிக்கு திருமணம் ஆகி விட்டது. 2-வது சகோதரி மன்னார்குடியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறாா். நான் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று எனது தந்தை என்னிடம் அடிக்கடி கூறுவார்.நேற்று(நேற்றுமுன்தினம்) எனது தந்தை சங்கர் வயலுக்கு வேலைக்கு சென்ற போது வயலில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று(நேற்று) மாலை நடக்கிறது. ஏழை கூலித்தொழிலாளியான எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றவும், கல்வியின் அவசியத்தை உணர்ந்தும் எனது தந்தையின் உடல் வீட்டில் இருக்கும் நிலையில் 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுத வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவிகள்-ஆசிரியர்கள் ஆறுதல்
கண்களில் நீர் வழிய தேர்வு மையத்துக்கு வந்த மாணவி சந்தியாவுக்கு சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர்.