தர்மபுரி ரெயிலில் தவறியவாய் பேச முடியாத 8 வயது சிறுமி 21 ஆண்டுக்கு பிறகு புனேயில் மீட்புபெற்றோரிடம் ஒப்படைப்பு
தர்மபுரி ரெயிலில் தவறிய வாய் பேச முடியாத 8 வயது சிறுமி 21 ஆண்டுக்கு பிறகு புனேயில் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஏரியூர்
தர்மபுரி ரெயிலில் தவறிய வாய் பேச முடியாத 8 வயது சிறுமி 21 ஆண்டுக்கு பிறகு புனேயில் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வாய் பேச முடியாத சிறுமி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கெண்டயனஅள்ளி புதூரை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம்-மாதம்மாள் தம்பதி. இவர்களது மகள் ரம்யா. காதுகேளாமல் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் தர்மபுரி அருகே உள்ள தனியார் வாய் பேச முடியாத காதுகேளாத பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2002-ம் ஆண்டு பள்ளி சார்பில் குழந்தைகளை ரெயில் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சுற்றுலா அழைத்து சென்றனர். அப்ேபாது ரம்யா ரெயிலில் காணாமல் போனார். இதையடுத்து ரம்யாவின் பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் மகளை தேடும் முயற்சியை கைவிட்டனர்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வாய் பேச முடியாத ஒரு பெண் மராட்டிய மாநிலம் புனேவில் இருப்பதாக வெங்கடாசலத்தின் செல்போன் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்த இளம்பெண்ணின் புகைப்படம், பெயர் வந்தது. அவர் 21 ஆண்டுக்கு முன்பு ரெயிலில் காணாமல் போன தனது மகள் ரம்யா என தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்ட காதுகேளாதோர் நல சங்க நிர்வாகிகள் புனேவுக்கு சென்று ரம்யாவை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மகளை கண்ட பெற்றோர் கட்டி தழுவி வரவேற்றனர்.
அனைவருக்கும் நன்றி
இதுகுறித்து அந்த இளம்பெண் கூறியதாவது:-
சுற்றுலா சென்றபோது நான் ரெயிலின் இருக்கைக்கு கீழே தூங்கிவிட்டேன். அதனால் என்னை அவர்கள் விட்டு சென்று விட்டனர். ரெயிலில் மும்பை சென்ற என்னை. மராட்டிய போலீசார் மீட்டு ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு என்னை போல காது கேளாத மற்றும் வாய் பேசாத பெண் எனக்கு அறிமுகமானார். அவரிடம் நடந்த விவரம் குறித்து கூறினேன்.
பின்னர் அவர் தன்னுடனே தங்க வைத்து எனது புகைப்படம், அடையாளங்களை தமிழகத்தில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேசாத ஒரு அமைப்பிற்கு அனுப்பி வைத்தார். அதன் மூலம் நான் எனது பெற்றோரிடம் சேர்ந்து விட்டேன். தன்னை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.