சிறுமி கர்ப்பம்; தொழிலாளி மீண்டும் போக்சோவில் கைது
கூடலூர் அருகே ஜாமீனில் வந்தவர் சிறுமியை கர்ப்பமாக்கியதாக தொழிலாளி மீண்டும் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்,
கூடலூர் அருகே ஜாமீனில் வந்தவர் சிறுமியை கர்ப்பமாக்கியதாக தொழிலாளி மீண்டும் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பாலியல் பலாத்காரம்
தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக போக்சோ சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி சிறுமிகளிடம் வரம்பு மீறும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கூடலூர் அருகே சேபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்ேதாஷ் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சந்தோசை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சந்தோஷ் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து அதே சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமி கர்ப்பம்
இதில் சிறுமி கர்ப்பமானாள். இதுகுறித்து கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவள் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு காரணமான சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் சந்தோசை மீண்டும் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.