மாங்காட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - அரசு பள்ளி ஆசிரியை கைது

மாங்காட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-21 06:38 GMT

சென்னையை அடுத்த மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சவுபாக்கியம் (வயது 40) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இதே பள்ளியில் மாங்காடு, அப்பாவு நகரை சேர்ந்த பியூலா (35) என்பவர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாகவும், இல்லம் தோறும் கல்வி திட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வகுப்பும் எடுத்து வந்துள்ளார். மேலும் பள்ளியில் ஆசிரியர்கள் வராத நேரத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்து வந்தார்.

இந்தநிலையில் ஆசிரியை சவுபாக்கியம், பியூலாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி நேற்று முன்தினம் மாங்காடு போலீஸ் நிலையத்திலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

நேற்று பள்ளிக்கு வந்த பியூலாவை ஆசிரியை சவுபாக்கியம் மீண்டும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பியூலா, வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மாங்காடு போலீசார், பியூலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பியூலா தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பள்ளிக்கு சென்றனர். அங்கு தலைமை ஆசிரியர் அறையில் இருந்த ஆசிரியை சவுபாக்கியத்தை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற மாங்காடு போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியை சவுபாக்கியம் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பியூலாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை சவுபாக்கியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் புகார் அளித்ததின் பேரில் சவுபாக்கியத்திடம் மாங்காடு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட பியூலா குறித்து ஆசிரியை சவுபாக்கியம் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பதிவிட்டு இருந்தார் என்பதும், அவதூறான வார்த்தைகளில் பேசியதும் உறுதியானது.

இதையடுத்து பியூலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி ஆசிரியை சவுபாக்கியத்தை மாங்காடு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்