தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Update: 2023-04-24 19:14 GMT

பனமரத்துப்பட்டி:-

ஆட்டையாம்பட்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

மீன் வியாபாரி

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி வெள்ளையகவுண்டன்காடு பகுதியைச் சேர்ந்த லதிகாசரண் (வயது 29). இவர் ஆட்டையாம்பட்டி பஸ் நிலையத்தில் மீன் கடை வைத்துள்ளார். இவருக்கும் கடத்தூர் அக்ரஹரம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் மகள் உஷாராணி (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

நேற்று மதியம் உஷாராணியை வீட்டுக்கு வரும்படி அவருடைய தங்கை போன் செய்துள்ளார். உடனே அவர், கணவரிடம் தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அதற்கு லதிகாசரண், மீன் வாங்கி வைத்து விட்டு வருகிறேன், அதன்பிறகு செல்லலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கிடையே மனம் உடைந்த உஷாராணி வீட்டுக்குள் சென்று கயிற்றால் தூக்கில் தொங்கியுள்ளார். இதைபபார்த்த லதிகாசரண், தூக்கில் தொங்கிய மனைவியை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உஷாராணி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த உஷாராணியின் பெற்றோர், ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி வழக்குப்பதிவு செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி விசாரணை நடத்தினார். திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்