விஷம் குடித்து சிறுமி தற்கொலை: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சிறுமி தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவருடைய தந்தை கைகலத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் சிலருடன் சேர்ந்து கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனிடம் இருந்து அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி அந்த சிறுமி வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். சிறுமி தற்கொலை குறித்து கைகலத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலை வாங்க மறுப்பு
இதற்கிடையில் சிறுமியை கடத்தி சென்று ஆபாசமாக படம் எடுத்து பாலியல் துன்புறுத்தியதாகவும், தற்போது அந்த படத்தை வெளியிடுவதாக மிரட்டியதாலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் இதில் ஈடுபட்ட நபர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுமியின் உடலை வாங்க மறுத்து நேற்று முன்தினம் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களுடைய போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமலே உள்ளது. தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரி பிணவறை அருகே கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.