பழனி உழவர்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து கேரட், இஞ்சி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கு வரத்தை பொறுத்து காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக இஞ்சி வரத்து குறைவாக உள்ளதால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ இஞ்சி ரூ.150 வரையில் விற்கப்பட்டு வந்தநிலையில் தற்போது கிலோ ரூ.200-ஆக விற்பனை ஆனது. அதேவேளையில் மார்க்கெட்டில் கிலோ இஞ்சி ரூ.250 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயி ஒருவரிடம் கேட்டபோது, வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்து இஞ்சியின் விலை உயர்ந்துள்ளது என்றார்.