25 லாரிகளில் கொண்டு வரப்பட்ட ராட்சத குழாய்கள்
25 லாரிகளில் கொண்டு வரப்பட்ட ராட்சத குழாய்கள்
வேதாரண்யம்
வேதாரண்யம் அருகே 25 லாரிகளில் ராட்சத குழாய்கள் கொண்டு வரப்பட்டன. இந்த குழாய்கள் ஹைட்ரோ கார்பன் பணிக்காக கொண்டு வரப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடியில் தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்த பணிக்காக தினந்தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கருங்கற்கள் கொண்டு வரப்பட்டு ஆறுகாட்டுத்துறை கடலில் கொட்டப்பட்டு வருகிறது.
25 லாரிகளில் ராட்சத குழாய்கள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடமாநில பதிவு எண் கொண்ட 25 லாரிகளில் ராட்சத குழாய்கள் எடுத்து வரப்பட்டது. வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் அருகே சாலையோரம் அந்த லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
சமூகவலைதளங்களில் பதிவு
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த லாரிகளில் வந்த ராட்சத குழாய்கள் ஹைட்ரோகார்பன், ஓ.என்.ஜி.சி. பணிக்காக வந்துள்ளது என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த தகவல் வேதாரண்யம் பகுதி முழுவதும் வேகமாக பரவியது. இதனை அறிந்த விவசாயிகள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரிகளில் இருந்து ராட்சத குழாய்களை இறக்க விடாமல் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் நிம்மதி
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேதாரண்யம் போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரிகளில் வந்த ராட்சத குழாய்கள் ஆறுகாட்டுத்துறையில் நடைபெறும் தூண்டில் முள்வளைவு அமைக்கும் பணிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இந்த தகவலையும் அந்த பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதன்பிறகே அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.