மெட்ரோ ரெயில் பணியின்போது கிரேன் சரிந்ததால் ராட்சத இரும்பு கம்பிகள் பஸ் மீது விழுந்தன
ராமாபுரம் அருகே மெட்ரோ ரெயில் பணியின்போது கிரேன் சரிந்ததால் ராட்சத இரும்பு கம்பிகள் மாநகர பஸ் மீது விழுந்தன. இதில் டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
பூந்தமல்லி,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2-வது கட்டமாக கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரையும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையும் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரெயில் பணிக்காக கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை மவுண்ட்-பூந்தமல்லி சாலையின் நடுவில் உயர்த்தப்பட்ட பாதைக்காக ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்காக ராமாபுரம் அருகே சுமார் 30 அடி உயரத்துக்கு ராட்சத இரும்பு கம்பிகளால் தூண் கட்டப்பட்டு, அதனை கிரேன் உதவியுடன் பள்ளத்துக்குள் தூக்கி நிறுத்தி கான்கிரீட் போடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்காக நேற்று அதிகாலையில் கன்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட ராட்சத இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட தூண்களை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ராட்சத இரும்பு கம்பிகள் விழுந்தன
அப்போது அந்த வழியாக குன்றத்தூர் அரசு பஸ் பணிமனையில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஆலந்தூர் பணிமனை நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர், கண்டக்டர் உள்பட 8 ஊழியர்கள் பஸ்சில் இருந்தனர். டிரைவர் அய்யாதுரை (வயது 52) பஸ்சை ஓட்டினார்.
மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் இடம் அருகே வந்தபோது இரும்பு கம்பிகளை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ராட்சத கிரேன் திடீரென சரிந்தது. இதனால் ராட்சத இரும்பு கம்பிகள் அந்த வழியாக சென்ற மாநகர பஸ் மீது பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தன. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
3 பேர் காயம்
இதில் மாநகர பஸ் டிரைவர் அய்யாதுரை, பஸ்சில் இருந்த போக்குவரத்து ஊழியர் பூபாலன் (45) மற்றும் ராட்சத இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த டிரைலர் லாரி டிரைவர் ரஞ்சித்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் இல்லாததாலும், சாலையில் அதிகளவில் வாகனங்கள் செல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் சேதம் அடைந்த மாநகர பஸ் மற்றும் சரிந்து விழுந்த இரும்புகம்பிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.