தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக சைக்கிளில் சுற்றிய சிறுவன்

களியக்காவிளை அருகே பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக சைக்கிளில் சுற்றிய சிறுவனை ஆட்டோ டிரைவர்கள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2023-06-27 22:02 GMT

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வீட்டை  விட்டு வெளியேறி ஊர் ஊராக சைக்கிளில் சுற்றிய சிறுவனை ஆட்டோ டிரைவர்கள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

8-ம் வகுப்பு மாணவன்

களியக்காவிளை அருகே உள்ள மூவோட்டுகோணம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் அருகில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருடைய 14 வயதுடைய மகன் மேல்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் கடந்த சில நாட்களாக பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காக செல்லவில்லை. இதனால் தாயார் அடிக்கடி திட்டி வந்துள்ளார்.

இந்தநிலையில் சிறுவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான். பின்னர் வீட்டுக்கு வந்த சிறுவனை தாயார் கண்டித்து அறிவுரை வழங்கினார்.

இதனால் விரக்தியடைந்த சிறுவன் மாலை 4.30 மணிக்கு தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான். வழக்கமாக சிறுவன் எங்கு சென்றாலும், இரவு 7 மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவது வழக்கம்.

போலீசில் புகார்

ஆனால் இந்த முறை இரவு வெகுநேரமாகியும் சிறுவன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர் தங்களுக்கு தெரிந்த நபர்களிடமும், நண்பர்களிடமும் விசாரித்தனர். ஆனால், சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சிறுவன் மாயமானது குறித்து பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுக்கப்பட்டது.

போலீசார் சிறுவனின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தியை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். சிறுவன் மாயமான தகவல் வாட்ஸ் அப் குழுக்களிலும் பரவி வந்தது.

ஆட்டோ டிரைவர்கள் மீட்டனர்

இந்தநிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் குழித்துறை ஆட்டோ நிறுத்தம் அருகே ஒரு சிறுவன் சைக்கிளில் மிகவும் சோர்வாக வருவதை ஆட்டோ டிரைவர்கள் கவனித்தனர். அந்த சிறுவனை நிறுத்தி விசாரணை நடத்திய போது, அவன் தனது நிலையை சொல்லி அழுதான்.

அப்போது சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி சைக்கிளில் களியக்காவிளை, மார்த்தாண்டம், பம்மம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றியதாகவும், உடல் சோர்வு காரணமாக தளர்ந்து விட்டதாகவும் கூறினான். அந்த சிறுவன் கழுத்தில் தங்க சங்கிலி, கையில் பிேரஸ்லெட் அணிந்து டிப் டாப்பாக காட்சியளித்தான்.

இதைத்தொடர்ந்து சிறுவன் குறித்த தகவலை ஆட்டோ டிரைவர்கள் அவனது தந்தைக்கு செல்போன் மூலம் தெரிவித்தனர். இதையடுத்து தந்தை குழித்துறைக்கு விரைந்து வந்தார். அவரிடம் ஆட்டோ டிரைவர்கள் சிறுவனையும், அவன் ஓட்டி வந்த சைக்கிளையும் ஒப்படைத்தனர்.

பாராட்டு

இதையடுத்து ஆட்டோ டிரைவர்களுக்கு அந்த சிறுவனின் தந்தை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து விட்டு சிறுவனை தன்னுடன் அழைத்து சென்றார்.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்களை உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்