'டெலிகிராம்' மூலம் பழகிநிர்வாண 'வீடியோ கால்' பேசுமாறு கல்லூரி மாணவிக்கு மிரட்டல்:பட்டதாரி வாலிபர் கைது

‘டெலிகிராம்' மூலம் பழகி, நிர்வாண ‘வீடியோ’ கால் பேசுமாறு கல்லூரி மாணவியை மிரட்டிய பட்டதாரி வாலிபரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-22 18:45 GMT

நிர்வாண 'வீடியோ கால்'

தேனி பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டே டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக 'டெலிகிராம்' செயலியில் போட்டித்தேர்வு தொடர்பான ஒரு குழுவில் சேர்ந்து இருந்தார். அதே குழுவில் தளபதி என்ற பயனர் கணக்கில் மற்றொரு நபரும் பயணித்தார்.

அந்த நபர், இளம்பெண்ணுக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பி நட்பாக பழகினார். அந்த பழக்கத்தை பயன்படுத்தி அந்த பெண்ணின் 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தள பயனர் கணக்கு மற்றும் கடவுச் சொல் விவரங்களை பெற்றுள்ளார். பின்னர், அந்த நபர் அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை சேமித்து வைத்துக் கொண்டு, அந்த பெண்ணிடம் தன்னுடன் 'வீடியோ காலில்' நிர்வாணமாக பேசவில்லை என்றால் புகைப்படங்களை நிர்வாணமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார்.

பணம் கேட்டு மிரட்டல்

அந்த பெண்ணும் பயத்தில் வீடியோ கால் செய்து பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீடியோ கால் செய்ததை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்து வைத்து கொண்டு மிரட்டினார். இதையடுத்து அந்த பெண் டெலிகிராம் செயலியில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மர்ம நபர் மீண்டும் 'வீடியோ கால்' அழைப்பில் வருமாறு மிரட்டினார். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.

இதனால் அந்த நபர் சம்பந்தப்பட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் இருந்த அவரது தம்பியின் இன்ஸ்டாகிராமுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார். அதில் உனது அக்காளின் நிர்வாண வீடியோ உள்ளதாகவும் ரூ.2 லட்சம் கொடுக்காவிட்டால் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினார். இதையடுத்து அவர் முதல் தவணையாக ரூ.100, 2-வது தவணையாக ரூ.2,000 மட்டும் அனுப்பினார். பின்னர் இதுகுறித்து அவர் தனது அக்காளிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இந்த சம்பவம் குறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

பட்டதாரி கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மர்ம நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் திருவள்ளூர் மாவட்டம் மேல்அய்யன்பாக்கம் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்த வேலு மகன் யோகேஷ்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து யோகேஷ்குமாரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டு இருப்பதாகவும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளம்பெண்களுக்கு உதவி செய்வது போல் பழகி அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி வந்ததாகவும் தெரியவந்தது. பின்னர், கைது செய்யப்பட்ட யோகேஷ்குமாரை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்