அரசு பள்ளிக்கூடங்களில் நியமனம் பெற்றும் ஊதிய பற்றாக்குறையால் குமுறும் பகுதி நேர ஆசிரியர்கள்

அரசு பள்ளிக்கூடங்களில் பணி நியமனம் பெற்றும் ஊதிய பற்றாக்குறையால் பகுதி நேர ஆசிரியர்கள் குமுறிக்கொண்டு உள்ளனர்.

Update: 2023-06-14 21:56 GMT

அரசு பள்ளிக்கூடங்களில் பணி நியமனம் பெற்றும் ஊதிய பற்றாக்குறையால் பகுதி நேர ஆசிரியர்கள் குமுறிக்கொண்டு உள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்கள்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினி துறை, உடற்கல்வி, ஓவியம், கைவினைத்துறை, வாழ்க்கைக்கல்வி, தையல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி போதிக்க பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 500 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கணினி ஆசிரியர்களாக பி.எஸ்.சி. அல்லது எம்.எஸ்.சி. கணினி மற்றும் பி.எட். படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இதுபோல் ஒவ்வொரு துறைக்கும் தகுதியான நபர்களை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை நியமித்தது. வாரத்துக்கு 3 அரை (½) நாட்கள் என்ற அடிப்படையில் இவர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். தொடக்க ஊதியமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

கோரிக்கை

பின்னர் 2 ஆண்டுகளில் ஊதியம் ரூ.7 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் என்று அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பு பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்பது ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

ராஜினாமா

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பாசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர் எஸ்.ராமலிங்கம் என்பவர் தனது பணியை உதறித்தள்ளி உள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ராஜினாமா கடிதம் எழுதி உள்ளார். அத்துடன், அவர் பேசி பதிவு செய்த வீடியோ படத்தையும் தனது ஆசிரியர் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார்.

இது ஈரோடு மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி பகுதி நேர ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:-

பகுதி நேர ஆசிரியர்களாகிய எங்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியமும் மே மாதம் விடுமுறை என்ற பெயரில் வழங்கப்படுவதில்லை. இந்த மாதத்தில் எங்களுக்கு குடும்பம் நடத்த வேண்டாமா... நாங்கள் என்ன செய்வோம் என்பதை அரசு கொஞ்சமும் யோசிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. வாரத்துக்கு 3 அரை நாட்கள் வேலைதானே என்று கூறுகிறார்கள்.

ஆனால் வாரம் முழுவதும் நாங்கள் வேலை செய்கிறோம். நிரந்தரம் செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். 16 ஆயிரத்து 500 பேர் பணி நியமனம் செய்யப்பட்டதில் தற்போது சுமார் 12 ஆயிரம் பேர்தான் உள்ளனர். பலர் இறந்து விட்டனர். பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்களின் குடும்பங்களுக்கு எந்த நிதி உதவியோ, பணி பாதுகாப்போ இல்லை. எனவே எங்கள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்