மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ்

மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு சான்றிதழை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

Update: 2023-09-22 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடு சான்றிதழை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

புவிசார் குறியீடு

மார்த்தாண்டம் தேனுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு சான்று வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து புவிசார் குறியீடு சான்று வழங்கும் விழா நேற்று மார்த்தாண்டம் வெட்டுமணியில் உள்ள மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் நடந்தது. விழாவில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்துக்கு புவிசார் குறியீடு சான்றிதழை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நமது மாவட்டம் பல சிறப்புகளை கொண்டது. அதில் மார்த்தாண்டம் தேன் இன்னும் ஒரு சிறப்பை பெற்று தந்துள்ளது. தமிழகத்திற்கு 58 புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அவற்றில் குமரி மாவட்டத்தில் 6 புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அவற்றில் மார்த்தாண்டம் தேன், மட்டிப்பழம், பார்வதிபுரம் கோவில் நகைகள், கிராம்பு, நல்ல மிளகு, ஈத்தாமொழி தேங்காய் ஆகியவை உள்ளன.

இயற்கை பாதுகாப்பு

மணக்குடி பகுதியில் சதுப்பு காடுகள் வளர்ப்பு பயிர் உருவாக்கப்பட்டுள்ளது. பனை மரத்தை காக்க 76 கி.மீ. கடற்கரை பகுதியில் பனைமரம் நட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இயற்கையை பாதுகாக்க சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

குமரி மாவட்டம் இந்திய அளவில் முழு அளவிற்கு குப்பை இல்லாத மாவட்டமாக திகழ்கிறது. குமரி மாவட்டத்ைத வருகிற டிசம்பர் மாதம் முழுமையாக குப்பை இல்லாத மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேன் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு துணையாக உள்ளது. மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார்குறியீடு கிடைத்துள்ளதால் இனிமேல் யாரும் மார்த்தாண்டம் தேன் பெயரில் விற்பனை செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தமிழ்நாடு அரசின் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் சஞ்சய் காந்தி, கதர் கிராம தொழில்கள் துணை இயக்குனர் அருணாசலம், மண்டல துணை இயக்குனர் பாரதி, குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி, தேனீ வளர்ப்போர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆமோஸ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் டி.பி.ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், நாகர்கோவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் எபனேசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்