மரபியல் பயிர்கள் கண்காட்சி மற்றும் விவசாயிகள் மேளா

ஊட்டியில் மரபியல் பயிர்கள் கண்காட்சி மற்றும் விவசாயிகள் மேளாவை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-20 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் மரபியல் பயிர்கள் கண்காட்சி மற்றும் விவசாயிகள் மேளாவை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

கண்காட்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை வளாகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மரபியல் பல்வகைமை கண்காட்சி மற்றும் விவசாயிகள் மேளாவை நேற்று மாவட்ட கலெக்டர் அம்ரித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் பாரம்பரிய பயிர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக முன்னோர் செய்த இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மரபியல் பயிர்கள் கண்காட்சி மற்றும் விவசாயிகள் மேளா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் மரபியல் பயிர்கள் கண்காட்சி மற்றும் களை உயிரி திரவம், பூச்சி விரட்டி ஆகியவை தயாரிக்கும் மேளாவும் நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் பாரம்பரிய மருத்துவ செடிகள், சிறுதானியங்கள், பயறு வகைகள், மரப்பயிர்கள் காட்சிப்படுத்தப்பட்டு விளக்கவுரையும் வழங்கப்படுகிறது.

ஆலோசனைகள்

நீலகிரி மாவட்டம் 200 வகையான மருத்துவ பயிர்கள், 175 வகையான ஆர்கிட் மலர்கள், 75 வகையான பூக்கும் மரங்கள் உள்பட 3,700 வகையான தாவரங்கள் நிறைந்த உயர்கோளம் ஆகும். பாரம்பரிய மருத்துவ செடிகள், சிறுதானியங்கள், பயறு வகைகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தன. பிற்காலத்தில் தோட்டப்பயிர்கள் மற்றும் வீரியரக காய்கறி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டதின் விளைவாக நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு மிக்க பாரம்பரிய பயிர்கள் அழியும் நிலையில் உள்ளன. இதனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்னென்ன என்பதை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் பயிரிடும் பயிர்களை அதிக லாபத்திற்கு விற்பதற்காக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

வாழ்த்து

இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் விவசாயிகளுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் மண்ணிற்கு ஏற்ற பயிர்களை அதிகளவில் விளைவித்து அனைவரும் பயன் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து பாரம்பரிய மூலிகை மருத்துவத்துக்காக தேசிய அளவிலான தன்வந்திரி சான்றிதழ் பெற்ற காளியம்மாள், கலெக்டரிடம் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குர் ஷிபிலா மேரி, துணை இயக்குனர்(வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை) ஜாயிலின் ஷோபியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்