கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
சென்னை,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்.சி., ஏ.எச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதைத் தவிர திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்களும், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்களும் உள்ளன.
இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. இப்படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்த பி.வி.எஸ்.சி.-ஏ.எச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நடைபெறுகிறது.
கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கடிதத்தை வருகிற 25-ந்தேதி முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 8-ந்தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் மாணவர் சேர வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.