சமையல் கியாஸ் மானியம் பெயரில் புதிய மோசடி

சமையல் கியாஸ் மானியம் பெயரில் புதிய மோசடி

Update: 2022-07-12 12:17 GMT

போடிப்பட்டி

ஆன்லைன் மூலம் புதிது புதிதாக மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் கியாஸ் சிலிண்டர் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைப்பதாகக் கூறி புதிய மோசடி நடைபெற்று வருகிறது.

மோசடிக் கும்பல்

அல்லும் பகலும் பாடுபட்டு பணத்தை சம்பாதித்து அதனை அரிசிப் பானையிலும், அஞ்சறைப் பெட்டியிலும் முன்னோர் சேமித்து வைத்தனர்.அந்த பணத்துக்குப் பாதுகாப்பில்லை என்று பயமுறுத்தி அவர்களை வங்கிகளில் சேமிக்கப் பழக்கினோம். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி ஏமாற்றும் மோசடிக் கும்பல்களால் வங்கிகளில் இருக்கும் பணத்துக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. வங்கிகளில் சிறுகச் சிறுக சேமித்து வைக்கப்பட்டுள்ள பணத்தைக் குறி வைத்து உழைக்காமல் உடல் வளர்க்க விரும்பும் ஒரு கூட்டம் களமிறங்கியுள்ளது. உங்கள்கு ஏடிஎம் கார்டு பிளாக் ஆயிருக்கு, கார்டு மேல நம்பர் சொல்லு என்று பாமர மக்களை ஏமாற்றி வங்கிகளில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்யும் வட இந்தியக் கும்பல் குறித்து இப்போது மக்களிடையே பெருமளவு விழிப்புணர்வு உண்டாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் புதுப்புது வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர்.அதன்படி ஆன்லைன் லாட்டரி மூலம் உங்கள் போன் எண்ணுக்கு பெரிய தொகை விழுந்திருப்பதாகக் கூறி வங்கி கணக்கு எண்ணைப் பெற்று கணக்கிலுள்ள பணத்தைத் திருடுவது, வரி பாக்கியை வங்கிக் கணக்கு மூலம் செலுத்துமாறு வலியுறுத்தி விபரங்களைப் பெற்று திருடுவது, கீழே உள்ள இணைப்பைத் திறந்தால் பரிசு பெறலாம் என்பது போன்ற இ-மெயில் அனுப்பி அதன் மூலம் நமது விபரங்களைத் திருடுவது, நண்பர்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி அவசர உதவி என்று கூறி பணம் பெறுவது என்று பலவழிகளில் ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பூசி

இந்த மோசடி ஆசாமிகள் கொரோனாவையும் விட்டு வைக்கவில்லை.கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிய நேரத்தில் ஆதார் எண், ஒடிபி விபரங்களைக் கொடுத்தால் இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கூறி விபரங்களைப் பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த மோசடி நபர்கள் தற்போது புதிய வகை மோசடியில் இறங்கியுள்ளனர். நாளுக்கு நாள் சமையல் கியாஸ் விலை உயர்ந்து வரும் நிலையில் பலருடைய வங்கிக் கணக்கில் மானியம் வரவு வைக்கப்படுவதில்லை. இதனைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

உங்களது வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படாத மானியம் ரூ. 8 ஆயிரம் உள்ளது ரூ.10 ஆயிரம் உள்ளது என்று ஏதோ ஒரு தொகையைக் கூறி அதை உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கிறோம் எனக் கூறி வங்கிக் கணக்கு விபரங்களைப் பெற்று கணக்கிலுள்ள பணத்தை மொத்தமாக சுருட்டி விடுகிறார்கள்.எனவே இப்படி புதுசு புதுசாக யோசித்து மக்களை ஏமாற்றும் கும்பலிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.அறிமுகமில்லாத நபர்களிடம் வங்கிக் கணக்கு விபரம், ஏடிஎம் அட்டை எண் மற்றும் சுய விபரங்களை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளக் கூடாது.குறிப்பாக இலவசமாகக் கிடைப்பதற்கு ஆசைப்படக்கூடாது.ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் அவனது ஆசையைத் தூண்ட வேண்டும் என்ற சதுரங்க வேட்டைக்கு இரையாகி விடக் கூடாது.அதிக வட்டி, உடனடி கடன் போன்ற மாய வலைகளில் சிக்கி விடக் கூடாது.இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் ஆன்லைன் மூலம் ஏமாற்ற முற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வியர்வைத் துளிகளால் கிடைத்த பணம் ஏமாற்றுப் பேர்வழிகளின் கையில் சிக்கி விடாமல் பாதுகாப்பது நமது கையில் தான் இருக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்