வீடுகளுக்கு சிலிண்டரை வினியோகிக்க கூடுதல் பணம் வசூல்; குடும்ப தலைவிகள் குமுறல்

கியாஸ் விலை உயர்வு சுமையாக மாறிய நிலையில் வீடுகளுக்கு சிலிண்டரை வினியோகிக்க கூடுதல் பணம் வசூலிப்பதாக பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Update: 2022-10-08 19:59 GMT

கியாஸ் விலை உயர்வு சுமையாக மாறிய நிலையில் வீடுகளுக்கு சிலிண்டரை வினியோகிக்க கூடுதல் பணம் வசூலிப்பதாக பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சமையல் கியாஸ்

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் மட்டுமின்றி சமையல் கியாசும் அத்தியாவசிய பொருளாகி விட்டது. புகை தொல்லையின்றி விரைவான சமையல், அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டம் போன்ற காரணங்களால் நகரம் முதல் கிராமம் வரை சமையல் கியாஸ் பயன்பாடு அதிகரித்தது.

ஒருகாலத்தில் நகரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட சமையல் கியாஸ் தற்போது கிராமப்புற வீடுகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் நகர் பகுதிகளில் மட்டுமின்றி கிராமங்களில் கூட விறகு அடுப்பில் சமையல் செய்வது அரிதாகிவிட்டது. சமையல் கியாஸ் பயன்பாடு அதிகரிப்பதை விட, சமையல் கியாசின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சிலிண்டர் வினியோகம்

வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,095 ஆகிவிட்டது. இது சாதாரண, நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறிவிட்டது. ஆனால் அத்தியாவசிய பொருளாகிவிட்ட சமையல் கியாஸ், தவிர்க்க முடியாததாக மாறிஇருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப செலவு பட்ஜெட்டில் மட்டுமின்றி சமையல் அறையிலும் கியாஸ் சிலிண்டருக்கு தனி இடமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த சமையல் கியாஸ் சிலிண்டரை பெறுவதற்கு செல்போன் மூலம் அழைத்து பதிவு செய்யவேண்டும். அடுத்த ஒரு சில நாட்களில் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளரின் வீட்டுக்கே வந்து விடுகிறது. சைக்கிள், இருசக்கர வாகனங்கள், 3 சக்கர சைக்கிள், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கியாஸ் சிலிண்டர்களை கொண்டு வந்து வீடுகளுக்கு வினியோகம் செய்கின்றனர்.

கட்டணம்

இதற்காக கியாஸ் வினியோக நிறுவனத்தில் பதிவு செய்த ஊழியர்கள் சிலிண்டர் வினியோக பணியில் ஈடுபடுகின்றனர். அதன்மூலம் பலர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும் கியாஸ் சிலிண்டரை வீடுகளுக்கு கொண்டு வந்து தருவதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெற்று கொள்கின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் சிலிண்டர் வினியோகிக்கும் சிலர் கூறுகையில், கியாஸ் சிலிண்டர் வினியோகம் வேலை நிரந்தரமற்றது. இந்த வேலைக்கு அதிக சம்பளம் கிடைப்பதில்லை. குறைந்த வருமானத்தை கொண்டு தான் வாழ்க்கை நடத்தும் நிலை உள்ளது. கிராமங்களில் 20 கி.மீ. தூரம் வரை சென்று சிலிண்டர் கொடுக்க வேண்டியது இருக்கிறது.

ஒருசில வீடுகளுக்கு 2 அல்லது 3 முறை சென்றால் தான் சிலிண்டர் வினியோகிக்க முடிகிறது. அதுவரை மோட்டார் சைக்கிள், ஆட்டோக்களில் சென்று திரும்பி வரும் நிலை உள்ளது. அதேபோல் 3-வது மாடியில் இருக்கும் வீட்டுக்கு தோளில் சுமந்து சென்று சிலிண்டரை வழங்க வேண்டியது இருக்கிறது. பெட்ரோல் விலையும் உயர்ந்து விட்டதால் செலவு அதிகமாகிறது. கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் வேலைக்கு வழங்கப்படும் மாத சம்பளத்தை உயர்த்தி வழங்கினால் வாடிக்கையாளரிடம் பணம் கேட்டும் நிலை ஏற்படாது என்றனர்.

ரூ.60 வரை வசூல்

கியாஸ் சிலிண்டரை வினியோகிக்க பணம் கேட்பது குறித்து பெண்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

புவனேஸ்வரி (பழனி):- கடந்த சில ஆண்டுகளாக கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து ஆயிரத்தை கடந்து விட்டது. அதை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையே சிலிண்டரை கொண்டு வருபவர்கள் ரூ.30 முதல் ரூ.50 வரை வாங்குகின்றனர். மேலும் கியாஸ் சிலிண்டரை அடுப்பில் இணைத்து எரிய வைத்து சோதனை செய்தபின்னரே செல்கின்றனர். ஆட்டோவில் கொண்டு வருவதால் அதிக செலவு ஆகிறது என்று கேட்பதால் வேறுவழியின்றி கொடுக்கிறோம்.

ஈஸ்வரி (திண்டுக்கல்):- கியாஸ் சிலிண்டரை கொண்டு வருபவர்கள் ரூ.45 கூடுதலாக கேட்கின்றனர். அதுபற்றி கேட்டால் சிலிண்டரை கொண்டு வர தாமதம் செய்வார்களோ? என்ற அச்சம் உள்ளது. எனவே அதுபற்றி பலர் கேட்பதில்லை. ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், அதை வினியோகிக்க ரூ.45 வரை வசூலிப்பது ஏழை குடும்பங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.எனவே சிலிண்டர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அடிக்கடி குறைகிறது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைப்பதில்லை.

வள்ளி (நத்தம் அய்யாபட்டி):- கியாஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. இது பெரும் சுமையாக மாறிவிட்டதால், அதை குறைக்க வேண்டும். அதேபோல் கியாஸ் சிலிண்டரை வினியோகிக்க ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தொகை வசூலிக்கப்படுகிறது. அதிலும் அதிகபட்சமாக ரூ.60 வரை வசூலிக்கப்படுகிறது. அதுபற்றி கேட்டால் சிலிண்டர் கொண்டு வருவதற்கு பெட்ரோல் செலவு, சிரமம் என பல காரணங்களை கூறுகின்றனர். அதேநேரம் சிலிண்டரில் வால்வு சரியாக இருக்கிறதா? என்று சோதித்து பார்த்து தருகின்றனர். எனவே நிறைய விவாதித்தால் சிலிண்டரை தராமல் போய்விடுவாரோ? என்ற பயத்தில் கேட்ட தொகையை கொடுக்கிறோம். இதை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்