கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்
கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என அமைச்சர் காந்தி கேட்டுக்கண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளிப் பருவத்தில் 14 வயதில் தமிழ் கொடியை பிடித்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய கலைஞர் பேச்சாற்றலிலும், எழுத்தாற்றலிலும் சிறந்து விளங்கினார். சங்க தமிழ் கண்டார். பொன்னர் சங்கர் என பல நூல்களையும், வள்ளுவர் கோட்டம், பூம்புகார், குமரியில் வள்ளுவர் சிலை என அடையாளங்களை தமிழகத்திற்கு வகுத்து தந்ததோடு, கண்ணொளி திட்டம், கை ரிக்ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், போக்குவரத்து பொதுவுடமை, மே தின விடுமுறை, பெண்ணுக்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு, பெரியார் சமத்துவபுரம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் காப்பீடு திட்டம், உழவர் சந்தை, முதியோர் உதவித்தொகை, அரிசி கிலோ 1 ரூபாய் என மகத்தான திட்டங்களை வகுத்து தந்தவர் கலைஞர்.
பல்துறை நுண்ணறிவோடு ஒப்பற்ற தலைவராக விளங்கிய கலைஞரின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர், ஊர் கிளை, வட்டக்கிளை வாரியாக கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.