எட்டயபுரத்தில் நினைவு நாள்: பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
பாரதியார் நினைவுநாளையொட்டி எட்டயபுரத்தில் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்
எட்டயபுரம்:
பாரதியார் நினைவுநாளையொட்டி எட்டயபுரத்தில் பாரதி சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் கீதாஜீவன் மரியாைத செலுத்தினார்.
நினைவு நாள்
மகாகவி பாரதியார் 101-வது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியார் உருவச்சிலைக்கு தமிழக சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், உதவி கலெக்டர் மகாலட்சுமி, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டயபுரம் தாசில்தார் கிருஷ்ணகுமாரி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் பாரதியார் வேடம் அணிந்த குழந்தைகள் அவருடைய உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம், வையத் தலைமை கொள் நண்பர்கள் உள்ளிட்டோர் பாரதி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அரங்கில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு
நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 33 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மாவட்டம் முழுவதும் 15 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. இந்த சோதனைச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அவ்வப்போது நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.