சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

திண்டுக்கல்லில், சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-11 17:14 GMT

திண்டுக்கல் ரெயில் நிலையத்தை ஒட்டி ரெயில்வே மருத்துவமனைக்கு செல்லும் சாலை உள்ளது. இதன் அருகில் இந்திராநகர், கக்கன்நகர் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. ஆனால் குடியிருப்புகள் இருப்பதை பற்றி கவலைப்படாமல் ரெயில்வே மருத்துவமனைக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகளை கொட்டி குவித்து வருகின்றனர். பாலித்தீன் பைகள், சாக்கு மூட்டைகளில் குப்பைகள், கழிவுகளை மொத்தமாக கட்டி வந்து வீசுகின்றனர்.

இதுதவிர இறந்த போன நாய், பூனை உள்ளிட்டவையும் அங்கு வீசப்படுகிறது. அதோடு திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ரெயில்வே மருத்துவமனை சாலையில் மக்கள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல் கிழக்கு ஆரோக்கியமாதா தெரு, அரண்மனை குளம் ஆகிய பகுதிகளிலும் சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

காற்று வீசும் போது குப்பைகள் பறந்து சாலைக்கு வந்து விடுகின்றன. மேலும் மழைக்காலமாக இருப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகள் மட்டுமின்றி நகர் முழுவதும் குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்