தென்கரை பேரூராட்சி 10-வது வார்டில் குப்பைகள் அகற்றம்
பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்ட அறிவிப்பால் தென்கரை பேரூராட்சி 10-வது வார்டில் குப்பைகள் அகற்றப்பட்டது.
பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி 10-வது வார்டில் வாய்க்காலில் கழிவுநீர் செல்லாமல் சாலையில் தேங்கி நின்றது. பல நாட்களாக குப்பைகள் அள்ளாமல் குவிந்து இருப்பதாகவும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காததால் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி கட்சியின் மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் லட்சுமி, மாவட்ட செயலாளர் மாயாண்டி உள்பட கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட தயாராகினர். அப்போது அங்கே வந்த தென்கரை போலீசார் அவர்களை போராட்டத்திற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களிடம் தங்களது கோரிக்கை தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 15-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்து குவிந்து கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்றும் பணி நடந்தது. மேலும் கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடந்த குப்பைகளையும் அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டம் செய்யாமல் கலைந்து சென்றனர்.