சென்னைக்கு கஞ்சா கடத்த திட்டம்: ஆந்திராவில் மாவோயிஸ்டு கைது
சென்னைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டு இருந்த மாவோயிஸ்டு ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1,760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
சென்னை அருகே கடந்த வாரம் 160 கிலோ கஞ்சாவுடன் ஜீப் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பயணித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அந்த தகவலில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கஞ்சா கடத்தும் திட்டம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட தொடர் நடவடிக்கையில் ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற மாவோயிஸ்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தன், நிருபர்களிடம் கூறியதாவது:-
போதைப்பொருட்கள்
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தினோம். முதற்கட்டமாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில எல்லைப்பகுதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது.
மேலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடே என்னும் இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டோம். அங்குள்ள கின்னெகருவு என்ற கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பல மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மலை கிராமம் மாவோயிஸ்டு நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் ஆந்திர மாநில போலீசாரிடம் உதவி கோரப்பட்டது.
1,760 கிலோ கஞ்சா
அதன்பிறகு மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ஆந்திர மாநில போலீசார் இணைந்து அந்த மலை கிராமத்தை சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டோம்.
அப்போது, அங்கு சுந்தரராவ் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
இதையடுத்து சுந்தரராவை கைது செய்தோம். அவர் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு ஆவார். அவர் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் மற்றும் வெடிபொருள் பயன்படுத்தியது போன்ற முக்கிய பிரிவுகளின் கீழ் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
விசாரணையில் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை அதிகளவில் வாங்கி தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.