கஞ்சா கடத்தி விற்பனை: தலைமறைவான முக்கிய குற்றவாளி உட்பட 3 பேர் கைது
போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த முக்கிய குற்றவாளி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
போரூர்,
போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, போரூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி பத்திரிக்கை நிருபர்கள் போர்வையில் கஞ்சா கடத்தி வந்து விற்ற சூர்யா (வயது 30), பிரவீன் (29) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போரூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான வினோத் குமார் (37) என்பவர் செயல்பட்டு வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரதீப், குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் திருவேற்காடு பகுதியில் தலைமறைவாக இருந்த வினோத்குமார் மற்றும் அவரது உறவினர் தேவராஜ்(40), பாலாஜி(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
ரூ.50 லட்சம் பணபரிமாற்றம்
விசாரணையில், லோடு வேனில் வீட்டை காலி செய்வது போல் பொருட்களை ஏற்றி கொண்டு ஆந்திராவுக்கு சென்று கஞ்சா வாங்கி அதே லாரியில் பொருட்களுடன் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்ததும், அப்படி வரும்போது போலீசார் மடக்கி விசாரித்தால் வீட்டை காலி செய்து வேறு வீடு மாறி செல்கிறோம் என்று கூறி வந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த ஒன்றரை ஆண்டில் அவரது வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் வரை பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.