"தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது" அண்ணாமலை குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர், தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

Update: 2023-09-05 23:45 GMT

தென்காசி,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' 2-ம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கினார். பொட்டல்புதூரில் இருந்து கடையம் வரையிலும், கீழப்புலியூர் வாய்க்கால் பாலம் முதல் தென்காசி புதிய பஸ் நிலையம் வரையிலும் தொண்டர்களுடன் நடந்து சென்றார்.

2-வது நாளான நேற்று மாலை அவர் கடையநல்லூர் அருகே உள்ள மேல கடையநல்லூரில் பாதயாத்திரையை தொடங்கினார். அங்குள்ள கடல் ஈஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கு திரண்டிருந்த திரளான தொண்டர்களுடன் பாதயாத்திரையாக புறப்பட்டார். அவருக்கு ஏராளமானவர்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆசிரியர்களுக்கு வாழ்த்து

அவர் அக்ரஹாரம் தெருவுக்கு வந்தபோது அங்குள்ள தனியார் தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு ஆசிரியர்களை பார்த்து கும்பிட்டு, ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் புதிய பஸ் நிலையம், மணிக்கூண்டு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் வழியாக கிருஷ்ணாபுரம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார்.

அங்கு தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

கஞ்சா புழக்கம்

தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை, ஆனால் டாஸ்மாக்கில் வற்றாமல் டாஸ்மாக் தண்ணீர் விற்கப்பட்டு வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மத்தை வேர் அறுப்பேன் என்று கூறுகிறார். அவரது தாத்தா கருணாநிதியே இதுகுறித்து பேசி தோல்வி அடைந்துள்ளார்.

இந்தியாவில் 5 வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று பல்வேறு தேர்தல்கள் நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டுவர இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அண்ணாமலை புளியங்குடி டி.என்.புதுக்குடியில் இருந்து பல்வேறு வீதிகள் வழியாக சிந்தாமணி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்