3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தாய், 2 குழந்தைகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-06-01 18:45 GMT

கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விமலா என்கிற அஞ்சலை (50) என்பவருக்கும் வீட்டு மனை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று அஞ்சலை மற்றும் சங்கராபுரம் அருகே பாசார் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (27), மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தை சேர்ந்த ராமு (24) மற்றும் 2 பேர் சேர்ந்து வளர்மதி, அவரது 11 வயது மகன், 10 மாத குழந்தையை கொலை செய்தனர்.

இது தொடர்பாக அஞ்சலை உள்பட 5 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அஞ்சலை, தமிழ்செல்வன், ராமு ஆகிய 3 பேரும் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குண்டர் சட்டம்

இனி வரும் காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அஞ்சலை உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து இதற்கான உத்தரவு நகலை கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறை அலுவலர்கள் மூலம் வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் அஞ்சலைக்கும், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் தமிழ்செல்வன், ராமுவிடம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்