விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கோத்தகிரி அருகே விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழா
கோத்தகிரி அருகே தேனாடு கீழட்டி கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்றதாகும். கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் மக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் திருப்பணிகள் தொடங்கி நடந்து வந்தது. அங்கு வர்ணம் பூசும் பணிகள் நிறைவு பெற்றது. இந்தநிலையில் நேற்று விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கங்கா பூஜை, கணபதி வழிபாடு, புண்யா ஹவாசனம், கோ பூஜை, ஆலய பிரவேசம் நடைபெற்றது. இரவு 8 மணி முதல் யாக பூஜை, கலச ஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, கணபதி ஹோமம், அஷ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 6 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், 16 வகை திரவியங்களால் அபிஷேகம், கணபதி அதர்வசீர்ஷ ஹோமம், சர்வதேவதா ஹோமம், மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
புனித நீர்
கம்ப கலசம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மைசூர் புரா சிவா துண்டதாரிய சுவாமி, இட்டக்கல் மடத்தைச் சேர்ந்த சிவகுமார சுவாமி ஆகியோர் தலைமையில், ஸ்ரீதர் சாஸ்திரி கும்பாபிஷேகத்தை நடத்தினார். விமான கோபுரத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, கலச கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கபட்டது. விநாயகருக்கு அபிஷேக, புஷ்ப அலங்கார பூஜை நடத்தப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசித்து சென்றனர்.