விநாயகர் சிலை விவகாரம்; போலீசில் மாவட்ட நிர்வாகம் புகார்
விநாயகர் சிலை விவகாரம்; போலீசில் மாவட்ட நிர்வாகம் புகார் கொடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்றார். கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது முகாம் அலுவலகத்தின் உள் பகுதியில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அந்த சிலை சேதமடைந்ததாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
இதனால் பா.ஜ.க.வினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட முயன்றனர். ஆனால் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், தவறான தகவல் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை உடைந்து விட்டதாக தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் புதுக்கோட்டை டவுன் போலீசில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை கிராம நிர்வாக அலுவலர் முனீஸ்வரன் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.