சென்னையில் நாளை 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு

சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.

Update: 2022-09-03 08:53 GMT

கோப்புப்படம் 

சென்னை,

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31-ந்தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சிலைகளை 4-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை எந்தெந்த பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று எங்கு கரைக்க வேண்டும்? என்பது பற்றிய விவரங்களை போலீசார் விழா கமிட்டியினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்று நாளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகின்றன. விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதி, காசிமேடு, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை கடலோர பகுதி ஆகிய 4 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் 4 இடங்களிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் முழுவதும் நாளை 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். விநாயகர் சிலைகள் புறப்படும் இடத்தில் இருந்து கடலில் கரைக்கப்படும் இடம் வரையில் போலீசார் உடன் சென்று பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்படும் வாகனத்துடன் போலீஸ் வாகனம் ஒன்றும் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

விநாயகர் ஊர்வலத்தையொட்டி ஊர்வல பாதைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரிய சிலைகளை கரைப்பதற்கு ஏதுவாக பட்டினபாக்கம், காசிமேடு, நீலாங்கரை, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களிலும் இன்றே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ராட்சத கிரேன் 4 இடங்களிலும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பட்டினப்பாக்கத்தில் நெரிசல் ஏற்படாமல் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக தனித்தனியாக இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்காக 5 இடங்களை போலீசார் தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.

பாலவாக்கம் கடற்கரை பகுதியில் சிலைகளை கரைப்பதற்கு ராட்சத கிரேன்களுடன் 2 டிரோன்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சிலைகளை கரைப்பதை பொதுமக்கள் பார்க்கும் வகையில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதற்கு கூம்பு வடிவிலான ஒலி பெருக்கி களும் பொறுத்தப்பட்டு உள்ளன. வீடுகளில் வைத்து பூஜை செய்யப்பட்ட சிலைகளை பொதுமக்கள் கடந்த 4 நாட்களாகவே கரைத்து வருகிறார்கள். இதுவரையில் பல்லாயிரக்கணக்கான சிறிய சிலைகள் கரைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் பட்டினப்பாக்கத் த்தில் சுமார் 5 ஆயிரம் சிலைகளும், காசிமேடு பகுதியில் 4 ஆயிரம் சிலைகளும் கரைக்கப்பட்டு உள்ளன.

நீலாங்கரை, திருவொற்றியூர் பகுதியில் ஆயிரக்கணக்கான சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளை கரைக்கும்போது கடலில் யாராவது மூழ்கி விட்டால் அவரை காப்பாற்றுவதற்கு ஏதுவாக பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நன்கு பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களும் தயாராக உள்ளனர். எந்த வித அசம்பாவி தங்களும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சென்னை மற்றும் ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனரக அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்