விநாயகர் சிலைகளை மட்டுமே வைத்து வழிபட வேண்டும்
பொது இடங்களில் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை மட்டுமே வைத்து வழிபட வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொது இடங்களில் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை மட்டுமே வைத்து வழிபட வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் பேசியதாவது:-
விநாயகர் சிலை அமைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்புடைய வருவாய் கோட்ட அலுவலரிடம் (ஆர்.டி.ஓ.) உரிய அனுமதி பெற்ற பின்னர் சிலை அமைக்க அனுமதிக்கப்படும். கணிமண் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பொதுஇடங்களில் வைத்து வழிபட வேண்டும். அமைக்கப்பட உள்ள சிலைகளின் உயரமானது, பீடத்துடன் சேர்த்து 10 அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அனுமதி இல்லை
ஊர்வலத்தின் போது நான்கு சக்கரவாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மூன்று சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. சிலை அமைவிடம், ஊர்வலம் மற்றும் கரைக்க கூடிய இடங்களில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கை வெடிப்பதற்கு அனுமதி இல்லை. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு மாவட்ட நிர்வாகம், போலீசார் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பில்லாவண்ணம் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்கள் சரவணகுமார் (தஞ்சை), லட்சுமணன் (கும்பகோணம்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) தவவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.