கொட்டும் மழையில்விநாயகர் சிலைகள் ஊர்வலம்

சிவகாசியில் கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-09-04 18:58 GMT

சிவகாசி, 

சிவகாசியில் கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

விநாயகர் சிலைகள்

சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் 44 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் நேற்று சிவகாசி நகரம், மாரனேரி, திருத்தங்கல், புதுப்பட்டி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த 37 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

சிவகாசி நகர பகுதியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 25 விநாயகர் சிலைகள் மாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வரப்பட்டது. அங்கு இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூடலிங்கம், மணிகண்டன், தியாகராஜன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் சிலைகளின் ஊர்வலம் புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

சிலைகள் ஊர்வலம் தொடங்கிய சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 2 மணி நேரம் பெய்தது. கொட்டும் மழையில் பக்தர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 563 போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் பக்தர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உள்பட போலீசார் நடந்து சென்றனர். விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு தெய்வானை நகரில் கரைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்